தருமபுரி மாவட்டம், சிறுதானியங்கள் அதிகம் பயிரிடும் மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் அதிக அளவு விவசாய நிலங்கள், மேட்டுப்பகுதியில் உள்ள காரணத்தால், இங்குள்ள விவசாயிகள் அதிக அளவு சிறு தானியங்களைப் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக, மழை பெய்த காரணத்தால் பாலக்கோடு, காரிமங்கலம், எட்டிமரத்துபட்டி, பெரியாம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களை ஏர் உழுது, சமன்படுத்தி விதை விதைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆடிப்பட்டத்தில் விதை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.