ஆடி மாதம் என்றாலே பல்வேறு திருவிழாக்கள் நடக்கும் தெய்வீக மாதமாகும். ஆடி அமாவாசை தினத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு மிகச் சிறப்பான நாளாகவும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் தந்து வழிபடக்கூடிய நாளாக அனுசரிக்கும் நாளாக கடந்த கால ஆடி அமாவாசை நாள் இருந்தது.
நீர் நிலைகள், ஆறு, போன்ற இடங்களில் புனித நீராடி கடவுளை வணங்குவதும், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெறும் வகையில் ஆடி அமாவாசையின் சிறப்பாகும்.
தருமபுரி மாவட்டத்தில், ஆடி அமாவாசையன்று இருமத்தூர், தென்பெண்ணை ஆறு, டி.அம்மாபேட்டை, ஒகேனக்கல் காவிரி ஆறு, நெருப்பூர் முத்தையன் கோயில் போன்ற பகுதியில் ஏராளமானோர் திரண்டு புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடவுள்களை வழிப்பட்டு வருவர்.
இதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து காலை முதலே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து நீராடுவார்கள் .
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த நான்கு மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆடி ஆமாவாசை என்பதால், புனித நீராட புதுமணத்தம்பதிகளும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் உள்ளூர் பகுதியில் உள்ளவர்கள் ஒகேனக்கல் காவரி ஆற்றிற்கு வந்துள்ளனர்.
ஆனால், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒகேனக்கல்லிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை எனக் கூறி, சோதனை சாவடியில் அவர்களை காவல் துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
இதனால், ஒகேனக்கல்லில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கமுடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்தகாலங்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த ஒகேனக்கல் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க:புதரில் சிக்கிய ஒரு வயது கரடி உயிரிழப்பு!