நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள மசினகுடி பகுதியைச் சுற்றி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. மசினகுடி பகுதி மக்களின் கால்நடைகள் இந்தப் புலிகள் காப்பக வனப் பகுதியில் தினந்தோறும் மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன.
அந்த வகையில், இன்று (ஆக. 31) காலை மசினகுடி குரும்பர் பாடியைச் சேர்ந்த கௌரி (வயது 50) என்ற பழங்குடியினப் பெண்மணி உள்பட மூன்று பேர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்கா வனப்பகுதிக்குள் மாடு மேய்க்கச் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக புதரில் மறைந்திருந்த புலி ஒன்று கௌரியை பின்புறமாகச் சென்று தாக்கியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அருகிலிருந்த புதருக்குள் கௌரியின் உடலை இழுத்துச் சென்ற புலி அவரை இரையாக்கியது.
இவை அனைத்தையும் நேரில் கண்ட மற்ற இரண்டு பெண்கள், இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, விரைந்து வந்த சிங்காரா வனத்துறை, மசினகுடி காவல் துறை அலுவலர்கள், உயிரிழந்த கௌரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புலி தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.