தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (32). இவர் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரைகளில் உள்ள திருட்டு மின்மோட்டார்கள் குறித்து பொதுப்பணி மற்றும் மின்சார துறையினருக்கு தகவல் அளித்தார்.
அதனடிப்படையில் இரு துறை சார்ந்த அலுவலர்களும் அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார்களை அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
இதில் குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பிரசாந்த்(26), அவரது உறவினர்களின் மின்மோட்டார்கள் அகற்றப்பட்டதால் ராஜா மீது அவர்களுக்கு பகை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இரவு ராஜாவை, பிரசாந்த் கத்தியால் குத்தியதில் ரத்த காயத்துடன் கம்பம் அரசு மருத்துவமனையில் ராஜா சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கூடலூர் தெற்கு காவல் துறையினர் பிரசாந்த் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது கரோனா நோய் பரவலால் காணொலி காட்சி வழியாக தேனி மாவட்ட சிறையில் இருந்தவாறு குற்றவாளி பிரசாந்த் தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதில் பிரசாந்த்திற்கு ஆயுள் தண்டனை, 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் அபராத தொகைய செலுத்த தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பளித்தார்.