தருமபுரி மாவட்டத்தில் இன்று (ஜூலை 31) மூன்று பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயது ஆண், பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் உட்பட மூவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாரண்டஅள்ளி ஈ.பி. காலனி பகுதியைச் சேர்ந்த 95 வயது முதியவர் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் கடும் மூச்சுத் திணறல், காய்ச்சல், சளி பாதிப்போடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாசம் கடந்த ஏழு நாள்களாக அளிக்கப்பட்டது. நுரையீரல் பலமடையும் வகையில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மருந்தும் வழங்கப்பட்டது. தற்போது அவர் கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு இன்று திரும்பினார். மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் முதியவரை வழியனுப்பி வைத்தனர்.
அதேபோல், ரெட்டியூரை அடுத்த எட்டியானூர் பகுதியைச் சார்ந்த 60 வயது முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 761 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 479 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 278 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.