திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் இறுதிவரை இங்கு 200க்கும் குறைவானவர்களே தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். பின்னர், மே 4ஆம் தேதி ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நாள்தோறும் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வரத் தொடங்கினர்.
இதனால், பெரும்பாலானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை மளமளவென உயரத் தொடங்கியது. இதன் காரணமாக, ஜூன் மாதத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்தது. பின்னர், நாள்தோறும் சராசரியாக 20 முதல் 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாள்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் உயரத் தொடங்கியது.
இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 44 பேருக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி அதிகபட்சம் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், பாதிப்பில் புதிய உச்சமாக இன்று (ஜூலை 5) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 86 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அலுவலர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.