திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “மக்களுக்கு எதையும் செய்யாமல் இருந்தால் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. நலத்திட்டங்கள் செய்ததால் தான் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அதிமுக அரசு செய்த நலத்திட்டங்களை மக்கள் மறந்திருப்பார்கள் என ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் அவருக்கு கடைசியில் ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சும்” என்றார்.
இதையடுத்து, நியாய விலைக்கடை பணியாளர்கள் வருகின்ற 24 ஆம் தேதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, “நியாய விலை கடை ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் இந்த நேரத்தில் போராட்டம் நடத்த முடிவு எடுக்க மாட்டார்கள். இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.
மேலும், “தமிழ்நாடு முழுவதும் ஜூலை மாதத்திற்கான நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச பொருள்கள் தமிழ்நாடு முழுவதும் 82 விழுக்காடு வழங்கப்பட்டுவிட்டது. பொருள்கள் எங்கும் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்கிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:கடையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி மரணம் - காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகை