சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் (54). இவர் சொந்தமாக தனது வீட்டருகே மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த தீனா(19), நாகராஜன், அர்ஜூன், சதீஷ், பாலாஜி ஆகியோர் அடிக்கடி வந்து கத்தியைக் காட்டி மிரட்டி, கடையில் இருக்கக்கூடிய பொருட்கள் மற்றும் கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இதனை தன்ராஜ் தட்டி கேட்டால், கத்தியைக் காட்டி கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டி வந்துள்ளனர். இதனால் பயந்து நீண்ட நாட்கள் தன்ராஜ் புகார் அளிக்காமல் இருந்து நேற்று முன் தினம் (ஜூன் 14) வேறு வழியில்லாமல் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு (ஜூன் 15) ரவுடிகள் சிலர் கோட்டூர்புரம் குடியிருப்பில் அராஜகம் செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அப்போது இந்தத் தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது சுமார் 7 இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடித்துவிட்டு, அந்தப் பகுதியில் அராஜகம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்களைப் பிடித்து விசாரிக்கும் போது தீனா(19) என்பவருக்கு பிறந்த நாள் என்பதால், அரிவாளால் கேக் வெட்டி, குடித்துவிட்டு கத்தியைக் கொண்டு நடனமாடியது தெரியவந்தது.
மேலும் மாமூல் கேட்டு மிரட்டுவதாக தன்ராஜ், இவர்கள் மீது தான் புகார் அளித்ததும் காவல் துறையினருக்குத் தெரியவந்தது. இதனடிப்படையில், தீனா(19), நாகராஜ்(20), சண்முகம் (24), மைக்கேல் (18), விக்னேஷ்(19), மணிகண்டன்( 19) மற்றும் 16 வயது சிறுவர் உட்பட 7 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரையும் விசாரணை செய்து, காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.