மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியைச் சேர்ந்த மீனா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “எனது தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். எனது தாய் விவசாயக் கூலி வேலை பார்த்து வருகிறார். நான் கடந்த 2014ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தேன்.
அப்பொழுது திருமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர், என் மீது ஆசிட் வீசிவிட்டு சென்றுவிட்டார். இதில் எனது உடல் முழுவதும் பாதிக்கப்பட்டது. வலது பக்க முகமும், வலது கண்ணமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
பின்னர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. என் மீது ஆசிட் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட எனது முகம் மற்றும் உடலை சீர் செய்வதற்கு அரசு செலவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அளிக்கவும், எனது மன உளைச்சல் போன்றவற்றிற்காக நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இது குறித்து உரிய சாட்சியங்களை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை இல்லை. மேலும் நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு இன்னும் நஷ்ட ஈடு எதுவும் வழங்கப்படவில்லை. எனவே உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் ஆஜராகி, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பில், ஆசிட் வீசியத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு இழப்பீடாக வழங்கபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.