தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவந்த போதிலும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்தனர்.
அப்போது, வாகனத்தில் இருந்த சுரேஷ் என்பவர் தப்பியோடிவிட்டார். பின்னர் கூடலூரிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கடத்தவிருந்த 80 கிலோ கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது.
மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல்செய்து கூடலூரைச் சேர்ந்த நவீன்குமார் (30), கேரளாவைச் சேர்ந்த பைசல் (24), ஸ்டார்வின் (28) ஆகிய மூவரை கைதுசெய்தனர்.
பின்னர் இது தொடர்பாக வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.