இது குறித்து ஈராக்கின் மனித உரிமைகள் உயர் ஆணையத்தின் உறுப்பினர் அலி அல்-பயாதி கூறுகையில், "அக்டோபர் முதல் வாரத்திலிருந்து நடக்கும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 485 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 27 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்" என்றார்.
அரசு உயர் பதவிகளில் பரவிக்கிடக்கும் ஊழலை எதிர்த்தும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கக்கோரியும் ஈராக் மக்கள் அக்டோபர் முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து அல்-பயாதி கூறுகையில், போராட்டத்தால் இதுவரை 2,807 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 107 பேர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார். இதுமட்டுமின்றி சமூக செயற்பாட்டாளர்கள் 48 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
அரசுக்கு எதிரான போரட்டங்களை முன்னெடுக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் ஈராக்கில் தொடர்கதையாகிவருகிறது. பாக்தாத் உள்ளிட்ட நகரங்களில் ஆயுதமின்றி போராடும் போராட்டக்காரர்களை குறிவைத்து நடந்தேறும் படுகொலைக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என்று ஈராக்கின் மனித உரிமைகள் உயர் ஆணையம் முன்னரே எச்சரிக்கைவிடுத்திருந்தது.
இதையும் படிங்க: லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிரெக்ஸிட்!