திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ளது சுக்காம்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் துரை ஆதித்தன் பூசாரி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் சிவன் கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) மதியம் கோயில் அருகேயுள்ள தனக்கு சொந்தமான வீட்டில் மனைவி ரேவதி, மகன் மனோஜ், மகள் நித்யா, மருமகன் ரமேஷ் ஆகியோருடன் இருந்துள்ளார்.
அப்பொழுது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் வந்து கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி அனைவரையும் கயிற்றால் கட்டி போட்டு பீரோவில் இருந்த 100 பவுன் நகை, 35 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் பூசாரி குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கட்டப்பட்டிருந்தவர்களை காப்பாற்றியுள்ளனர். பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கொள்ளை போன வீட்டை பார்வையிட்டு வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இக்கொள்ளை கும்பலை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.