தமிழ்நாட்டில் கரோனா தொற்று சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் தான் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
மக்கள் தொகை பரப்பளவில் சின்னஞ்சிறு மாவட்டமான தேனியில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு செவிலியர்கள், தேனி காவல் நிலைய தலைமைக் காவலர் என இன்று (ஆக. 20) ஒரே நாளில் 233 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மொத்தம் எட்டாயிரத்து 366 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள இரண்டாயிரத்து 519 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, போடியைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் தேனி மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்..