சேலம் நெடுஞ்சாலை வழியே பான்பராக், குட்கா கடத்தப்படுவதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் காவலர்கள் நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில், அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை நடத்தியதில், அதில் அரிசி மூட்டை மற்றும் இரும்பு பொருள்களுக்கு அடியில் தடைசெய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருள்கள் மூட்டை மூட்டையாக மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காவலர்கள் அதனை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். தொடர்ந்து லாரி ஓட்டுநரை காவலர்கள் கைதுசெய்தனர். மற்றொரு ஓட்நர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.