மறைந்த நம்மாழ்வார், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இந்த நெல் விழாவைத் தொடங்கி வைத்தார். அதனை முன்னெடுத்து நடத்தி வந்தவர், மறைந்த நெல் ஜெயராமன் ஆவர். இவ்விழாவின் மூலம் பாரம்பரியமாக சாகுபடி செய்து, மறைந்து போன நெல் ரகங்களை மீட்டெடுப்பதே, இந்த நெல் திருவிழாவின் நோக்கமாக இருக்கிறது.
நெல் திருவிழா தொடங்கியபோது சுமார் 10-க்கும் மேற்பட்ட மறைந்துபோன நெல் ரகங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது மாப்பிள்ளை சம்பா, காட்டு யானம், யானைக்கவுனி உள்ளிட்ட 176 வகையான நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு, விவசாயிகளுக்குள்ளாகவே பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
மறைந்த பாரம்பரிய நெல் ரகங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் பாரம்பரிய நெல் திருவிழாவை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த நெல் திருவிழாவில் மாவட்டம் முழுவதிலும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இதனையெடுத்து, தேசிய விவசாயிகள் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நம்மாழ்வார், நெல் ஜெயராமன் படங்களை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.