பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளி வந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் பள்ளி கல்வி துறை மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் இருப்பது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான அன்றே மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான அறிவிப்புக்களையும், தேர்வுகள் இயக்ககம் உடனே வெளியிடுவதுதான் நடைமுறையாகும்.
அப்போதுதான் மாணவர்கள், தங்களின் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், தாங்கள் ஒவ்வொரு பாடங்களிலும் பெற்றுள்ள மதிப்பெண்கள் சார்ந்து தாங்கள் செய்ய விரும்பும் முறையீடுகளை விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கோ அல்லது மறுகூட்டலுக்கோ தெரிவிக்க இயலும்.