தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு...! - 10 per cent reservation for medical seats

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க நீதி அரசர் கலையரசன் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை

By

Published : Jun 10, 2020, 7:42 PM IST

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட நீதி அரசர் கலையரசன் தலைமையிலான குழு பரிந்துரைக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"நீட் நுழைவுத் தேர்வால், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த, அடித்தட்டு சமூக மாணவர்கள் தான் அதிக அளவில், அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயில்கின்றனர். இப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் இரண்டு முதல் 6 மாணவர்கள் வரை மட்டுமே ஆண்டுதோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர். இது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு விலக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுக் கொடுக்க தவறிவிட்டது. நீட் தேர்வு மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு குழி தோண்டி புதைத்துவிட்டது. இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில், தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்கள், கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அப்பள்ளிகளில் படித்திருந்தால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பல போராட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடத்தியது.

இந்நிலையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்த குழு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, 10 விழுக்காடு வரை இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. தனது அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. இப்பரிந்துரையை நடப்பு கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.

அதிக மதிப்பெண் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களை, இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குள் இடம்பெறும் வகையில் கட்டுப்படுத்தாமல், இதர இட ஒதுக்கீடு இடங்களிலும்,பொதுப்போட்டி இடங்களிலும் இடம்பெறும் வகையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எந்த வித சட்ட ரீதியான சிக்கல்களும், தடங்கல்களும் ஏற்பட்டு விடாமல், எச்சரிக்கை உணர்வுடன் தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நடத்தும் நீட் பயிற்சி மையங்களை தரமானதாக மாற்ற வேண்டும். வட்டாரம் தோறும், தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி மையங்களை அரசு உருவாக்க வேண்டும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் பெரும்பாலான எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். அதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான தேர்வின் மூலம் மற்ற மாநில மருத்துவ இடங்களையும், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசு நிறுவன இடங்களிலும் சேர முடியும்.

இந்த நடவடிக்கைகளின் மூலம், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயன் அடைவதோடு, அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும். அவற்றின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் இச்சமயத்தில், இது போன்ற நடவடிக்கைகள் அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற உதவும். நீட் தேர்விலிருந்து, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரும் மாநிலங்களுக்கு, நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில், தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உடனடியாக மத்திய அரசு திருத்தத்தை கொண்டுவர வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details