'தமிழ்நாட்டில் மேலும் 10 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி' - தமிழ்நாடு புதுச்சேரியில் நீதிமன்றங்களை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 10 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களை ஜூன் 22ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக் குழு, மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, அங்கு 50 விழுக்காட்டு ஊழியர்களுக்கு மிகாமல் பணி ஒதுக்க வேண்டும் என மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு வர விரும்பாத வழக்கறிஞர்கள் காணொலி மூலம் வழக்கில் ஆஜராகவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் மேலும் 10 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஏற்கெனவே 19 மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் அரக்கோணம் (வேலூர்), ஸ்ரீரங்கம் (திருச்சி), வள்ளியூர் (நெல்லை), ஆலங்குளம் (நெல்லை), மேலூர் (மதுரை) ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி வழங்கப்படாமல், காணொலி காட்சி மூலமாகவே விசாரணை நடைமுறை தொடர வேண்டுமெனவும் நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.