மகபூபாபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஓய்எஸ். ஷர்மிளா, கடந்த 2021ஆம் ஆண்டு "ஒய்எஸ்ஆர் தெலங்கானா" என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஷர்மிளா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது நடவடிக்கைக்கு ஆளும் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியினர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஷர்மிளா, தெலங்கானா முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஷர்மிளா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தனது பாத யாத்திரையை தொடங்கினார். ஆனால், பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆளுங்கட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், பாத யாத்திரைக்கு அனுமதி கோரியும் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில், நேற்றிரவு(பிப்.18) மகபூபாபாத் நகரில் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒய்எஸ்ஆர் தெலங்கானாவின் கட்அவுட் மற்றும் பேனர்களை ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியினர் அகற்றியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.