டெல்லி:நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கியது. மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என 26 எதிர்கட்சிகளைக் கொண்ட 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்கத் தயார் என மத்திய அரசு கூறியபோதும், இதுவரை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. இதனால் மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்றும், எதிர்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அப்போதும் பிரதமர் மோடி இது தொடர்பாக பேசாததால் எதிர்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த 26ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்கட்சி எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
வழக்கமாக காலை 10 மணிக்கு முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டால், அன்றைய தினமே அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, அதனை விவாதிப்பதற்கான தேதி பின்னர் நிர்ணயிக்கப்படும் என கூறினார். இதற்கு எதிர்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்று (ஜூலை 27) நாடாளுமன்றம் கூடியபோது, மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாததை கண்டித்தும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். மேலும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து நேற்றும் மக்களவை முடங்கியது.
இதனிடையே நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, மோடி அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான விஜயசாய் ரெட்டி, "நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது நாட்டுக்கு எப்படி உதவும்?
இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசை பலவீனப்படுத்த முயற்சிப்பது தேசத்திற்கு நல்லது இல்லை. எதிர் எதிராக இல்லாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மோடி அரசுக்கு ஆதரவு அளித்து, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும். அதேபோல், டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசரச் சட்ட மசோதாவிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வாக்களிக்கும்" என்று கூறினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களும் உள்ளனர். இதனால், ஒய்எஸ்ஆர் காங்கிரசின் ஆதரவு மோடி அரசுக்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் செல்ல திட்டம் - ஜூலை 29, 30 தேதிகளில் பயணம்!