தெலங்கானா:ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா மாநிலம் இந்த மாதம் (நவ.30) இறுதியில் தேர்தலை எதிர்கொள்கிறது. தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க ஆளும் கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (BRS), காங்கிரஸ், பாஜக, ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா என நான்கு முனை போட்டி நிலவி வந்தது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்து கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்தமுறை அக்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று காங்கிரசாரும், ஒ.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவருமான ஒ.எஸ்.ஷர்மிளாவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சமீபத்தில் தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, பிஆர்எஸ் ஆட்சியையும், கே.சி.ஆரையும் கடுமையாகத் தாக்கி பேசி இருந்தார். மேலும், தெலங்கானா தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்போடு செயல்படும் பாஜகவிற்கு மாநிலத்தில் ஆதரவைப் பெருக்கும் வகையில் தெலங்கானா மாநிலத்திற்கு அதிரடியாகப் பல திட்டங்களை மத்தியில் ஆளும் பாஜக அறிவித்திருந்தது.
மேலும், தெலங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளியிட்டு அம்மாநில விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்றியது. ஏற்கனவே தெலங்கானா மாநில அரசியலில் மும்முனை போட்டி நிலவி வந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சரின் சகோதரியும், முன்னாள் முதலமைச்சரின் மகளுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா என்ற கட்சியைத் துவங்கி தெலங்கானா மாநில அரசியலில் தன்னை முன்னிறுத்தும் வகையில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
மேலும், ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா தெலங்கானாவில் ஆளும் கட்சிக்கு எதிராகவும் முதலமைச்சர் குடும்பத்திற்கு எதிராகவும் கடந்த ஆண்டு பாதயாத்திரை மேற்கொண்டார். ஆனால் பாதயாத்திரைக்கு அனுமதி இல்லை என போலீசார் அவரை கைது செய்திருந்தனர். மேலும் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிடுவதாக ஆதரவாளர்களுடன் காரில் சென்ற ஒய்.எஸ்.ஷர்மிளாவை தெலங்கானா போலீசார் ரெக்கவரி வாகனம் மூலம் காருக்குள் வைத்தபடியே கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் ஒய்.எஸ்.ஷர்மிளா தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் மற்றும் அவரது மகள் கவிதா ஆகியோரையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
தெலங்கானாவில் நடைபெற உள்ள தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவிலான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என ஒய்.எஸ்.ஷர்மிளாவும் அவரது கட்சித் தொண்டர்களும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், பி.ஆர்.எஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றுவதற்காக ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி எந்த ஒரு நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் ஒய்.எஸ்.ஷர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலங்கானா மாநிலம் இம்மாதத்தின் கடைசி நாளில் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது உங்களுக்குத் தெரியும். தெலங்கானா மக்கள் கே.சி.ஆரின் தவறான ஆட்சியில் கொதிப்படைந்துள்ளனர். மேலும் அவரது கொடூரமான ஆட்சியைக் கவிழ்க்கத் தயாராக உள்ளனர்.