டெல்லி:தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக இருந்து வருகிறார். இதனிடையே, தெலங்கானாவில் 'ராஜண்ண ராஜ்ஜியம்' என்ற ஒய்எஸ்ஆர் கட்சியின் ஆட்சியை கொண்டு வருவோம் என்ற முழக்கத்தை யுவஜன ஸ்ராமிகா ரைத்து தெலுங்கானா கட்சி (YSRTP) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், அவர் கட்சியை வலுப்படுத்துவதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
மறுபுறம் இக்கட்சி தொடர்பாக, பல்வேறான கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக உலா வருகின்றன. யுவஜன ஸ்ராமிகா ரைத்து தெலுங்கானா கட்சி, காங்கிரஸுடன் இணைக்கப்படும் (Merging YSRTP in Congress) என்றும் இதற்கான தீவிர பிரசாரம் வலுவாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை யுவஜன ஸ்ராமிகா ரைத்து தெலுங்கானா கட்சி (YSRTP) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா இன்று (ஆக.31) சந்தித்ததாகவும், அப்போது காங்கிரஸுடன் யுவஜன ஸ்ராமிகா ரைத்து தெலுங்கானா கட்சியை இணைப்பது குறித்த செயல்பாடுகள் முடிவடைந்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சர்மிளா, தெலஙகானா மாநிலத்தின் பிரச்னைகள் குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் விவாதித்து இருப்பதாகவும், தெலங்கானா மாநில மக்களின் நலனுக்காக தொடர்ந்து நான் பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கேசிஆர்-க்கான கவுண்ட்டவுன் தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.