இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அவரது மரணம் பேசும்பொருளானது.
இதனையடுத்து, தாம் தூம் பட புகழ் நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் சுஷாந்தின் தற்கொலைக்கு எதிராக குரல் கொடுத்தனர். இந்நிலையில் சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய்லீலா பன்சாலி மற்றும் கரண் ஜோகர் உள்ளிட்டோர்தான் காரணம் எனக் கூறி பலர் செய்தி வெளியிட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர் ஒருவரை அக்ஷய் குமார் பேட்டி எடுத்திருந்தார். இந்த பேட்டியைத் தொடர்ந்து அக்ஷய் குமாரை பலர் சமூக வலைதளங்களில் மிக கடுமையாக விமர்சித்தனர். அந்த வகையில், ரஷீத் சித்தீக் என்ற யூ- ட்யூபரும் தனது வலையொளியில் அக்ஷய் குமார் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.
இதனையடுத்து, சட்ட நிறுவனமான ஐ.சி. லீகல் மூலம் கடந்த 17ஆம் தேதியன்று குறிப்பிட்ட யூ-ட்யூப் சேனலிடம் அதற்குரிய விளக்கம் கேட்டு நடிகர் அக்ஷய் குமார் சட்டப்படி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். வலையொளியில் வெளியிடப்பட்ட காணொளியை உடனடியாகத் திரும்பப்பெறவில்லை என்றால் அவதூறு பரப்பியதற்காக ரூ.500 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுக்கப்படும் என்றும் அதில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக சித்தீக் தனது வழக்குரைஞர் ஜே.பி. ஜெயஸ்வால் மூலம் பதில் ஒன்றை இன்று (நவம்பர் 21) அனுப்பியுள்ளார். அதில், "சித்தீக் தனது யூ- ட்யூப் சேனலான எஃப்.எஃப் நியூஸில் வெளியான வீடியோக்கள் குறிப்பிட்ட யார் மீதும் அவதூறு பரப்பும் உள்நோக்கத்துடன் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை. ராஜ்புத்தின் மரண வழக்கில் மனுதாரருக்கு எதிராக தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை செய்திகளாக வெளியிட்ட சீத்தீக் அதற்கு நஷ்ட ஈடாக ரூ.500 கோடியை வழங்க வேண்டும்" என்றார்.