ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் புவனகிரி அருகே கடந்த ஜூலை 7ஆம் தேதி பலக்னுமா விரைவு ரயிலில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பெட்டிகளில் இருந்து புகை வெளியேறியதை கண்டதும் உடனடியாக ரயில் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தி நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தெலங்கானா மாநிலம் யாதாதிரி அடுத்த பொம்மைப்பள்ளி மற்றும் பகிடிப்பள்ளி இடையே கடந்த ஜூலை 7ஆம் தேதி சென்று கொண்டு இருந்த பலக்னுமா விரைவு ரயில் திடீரென தீப்பிடித்தது. ரயிலின் நான்கு பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில், பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நான்கு பெட்டிகளும் தீயில் கருகிய நிலையில், ரயில்வே மற்றும் மீட்பு படையினரின் துரித நடவடிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக ரயிலில் தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரயிலில் இருந்து புகை வெளியேறியதை கண்டதும் இளைஞர் ஒருவர், துரிதமாக செயல்பட்டு சங்கிலியை பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி பயணிகளை காப்பாற்றி பெரும் உயிர் சேதத்தை தவிர்த்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பட்டாபட்டணம் அடுத்த சின்ன மலப்புரா பகுதியைச் சேர்ந்தவர் சிகிலா ராஜ். சம்பவத்தன்று தனது தாய், தங்கை மற்றும் பாட்டியுடன் பலக்னுமா விரைவு ரயிலின் எஸ்-4 பெட்டியில் பயணித்து உள்ளார். மேல் படுக்கையில் சிகிலா ராஜ் படுத்து இருந்த நிலையில், திடீரென ரப்பர் கருகிய வாடை வந்ததாக கூறப்படுகிறது.
நேரம் செல்லச் செல்ல கருகிய வாசம் அதிகரித்த நிலையில், ரயில் ஜன்னல் வழியாக பார்த்தவருக்கு அதிர்ச்சியாக கரும் புகை வெளியேறி உள்ளது. உடனடியாக சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்த முயற்சித்து உள்ளார். முதல் முயற்சி தோல்வி அடையவே இரண்டாவது முறை ரயிலை நிறுத்தி உள்ளார்.
ரயில் தீப் பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டவாறு வெளியேற முயற்சித்து உள்ளனர். துரிதமாக செயல்பட்ட சிகிலா ராஜ், பயணிகள் அனைவரும் ரயிலை விட்டு வெளியேற உதவியுள்ளார். அதேநேரம் தொடர்ச்சியாக கரும் புகையை சுவாசித்ததால் சிகிலா ராஜ் மயக்கம் அடைந்தது உள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு பிறகு அவர் கண் விழித்து சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சக பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் தங்களது உடைமைகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகியதாக தெரிவித்து உள்ளார். மேலும், அதிகளவில் புகையை சுவாசித்ததால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு மயமக்கமடைந்ததாகவும், மருத்துவமனையில் தன்னை ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க :Himachal flood: மழையின் சீற்றத்தால் அடித்துச்செல்லப்பட்ட நூற்றாண்டு பழமைமிக்க பாலம்!