உதய்பூர் (ராஜஸ்தான்):உதய்பூர், தன் மண்டி பகுதியில் கன்ஹைய லால் என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக கன்ஹைய லால் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 28) கன்ஹைய லாலின் கடைக்குள் புகுந்த இரண்டு பேர் கூர்மையான ஆயுதங்களால் கன்ஹைய லாலைத் தாக்கி, தலையை துண்டித்து, வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாகப் பகிரப்பட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த கொடூர கொலையைக் கண்டித்து அப்பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவல் துறையினர் கொலை தொடர்பாக முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
வீடியோ பதிவு செய்து வெளியீடு:இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "டெய்லரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், ரியாஸ் மற்றும் அவரது நண்பர் இருவரும் துணி அளவு கொடுப்பது போல் கடைக்குள் வந்துள்ளனர். ஒருவருக்கு கன்ஹைய லால் அளவு எடுக்கிறார், மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். இதையடுத்து திடீரென கன்ஹைய லாலை வெளியே இழுத்து கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கழுத்தில் தாக்குகின்றனர். பின்னர், இருவரும் தங்களை முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் என அடையாளம் சொல்லி எச்சரிக்கை விடுத்து, டெய்லரின் தலையை துண்டித்தனர்" என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.