துங்கர்பூர்: ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் மாவட்டம், கர்வா காஸ் கிராமத்தில் மகர சங்கராந்தியை முன்னிட்டு இளைஞர் கும்பல் கிட்டா என்ற இசைக் கருவியை வாசித்து, நன்கொடை வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவ நேரத்தில் அதே சாலையில் சென்ற இளைஞரை மறித்த கும்பல் 100 ரூபாய் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, இளைஞர் நன்கொடை தரமறுத்ததாக கூறப்படும் நிலையில், கும்பல் இளைஞரை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. கும்பல் தாக்கியதில் அந்த இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் உயிருக்காக போராடியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவமனை சென்று இளைஞரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபர் நாது மீனா என அடையாளம் காணப்பட்டதாகவும், கூலி வேலை பார்க்கும் நாது மீனாவுக்கு மூன்று மகள்கள் உள்பட 4 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. நாது மீனாவை தாக்கிய இளைஞர் கும்பல் தலைமைறைவான நிலையில் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருவதாக போலீசார் கூறினர்.
இதையும் படிங்க:சேவல் சண்டை: தடையை மீறி சேவல் சண்டை- அநியாயமாக பறிபோன இரு உயிர்கள்!