மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய திலக் வர்மா பல போட்டிகளில் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஐதராபாத்தை சேர்ந்த 19 வயதே ஆன திலக் வர்மா அறிமுக தொடரிலேயே அருமையான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.
14 போட்டிகளில் 397 ரன்கள் குவித்து அணியில் இரண்டாவது அதிக ஸ்கோர் அடித்தவராக உள்ளார். திலக் வர்மாவின் ஆட்டத்தை கண்டு வியந்துள்ள சுனில் கவாஸ்கர் மற்றும் ரோஹித் ஷர்மாவும் அவர் விரைவில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தேசிய அணிக்காக விளையாடுவார் என்று கணித்துள்ளனர்.
இ டிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள திலக் வர்மா அறிமுக சீசனில் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை எனவும் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை தகுதி பெறாதது வேதனை அளிக்கிறது எனவும் கூறினார். கேப்டன் ரோகித் சர்மாவும், ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் இந்திய அணிக்காக நான் விளையாடுவேன் என்று கூறிய போது கண்களில் கண்ணீர் பெருகியது என்றார். தான் சுழற்பந்து வீசுவேன் என்றும், இந்திய அணியை மனதில் கொண்டு ஆல்-ரவுண்டராக வர விரும்புவதாகவும் கூறினார்.
சச்சின் டெண்டுல்கர், மஹேலா ஜெயவர்த்தனே, ஜாகீர் கான் ஆகியோரை இதற்கு முன்பு நான் நேரில் பார்த்ததில்லை, முதன் முதலாக ஹோட்டலில் அவர்களை பார்த்தபோது, பேசும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை என்று கூறினார் திலக் வர்மா. போட்டிக்கு முன் எந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எப்படி பேட் செய்ய வேண்டும் என்று அனைவரும் ஆலோசனை வழங்கியதாகவும் , எனது ஆட்டத்தை மேலும் மேம்படுத்தி, மன அழுத்தமின்றி விளையாட்டை எப்படி ரசிப்பது என கற்றுக் கொடுத்தனர் என்று திலக் வர்மா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆசிய கோப்பை ஹாக்கி: முதல் ஆட்டத்திலேயே தடம் பதித்த தமிழக வீரர்