போபால் (மத்திய பிரதேசம்):"ஒரு நூல் நிலையம் திறக்கும்போது, இரு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன" என்ற விவேகானந்தரின் கூற்றின் படி கல்வி என்பது ஒருவர் வாழ்வில் ஆகச் சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் நமக்கு எதை விட்டுச் சென்றார்களோ இல்லையோ கல்வியையும் அதை கற்கும் முறையையும் தெளிவுபடுத்திச் சென்றுள்ளனர்.
திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் என ஆரம்பித்து காமராஜர், அண்ணா, பெரியார் என பெருந்தலைவர்கள் வரை அனைவரும், கல்வியின் ஆழத்தை விளக்கிச் சென்றுள்ளனர். ஒருவரின் வாழ்க்கை கற்றலில் ஆரம்பித்து, கற்றலிலே நிறைவு பெறுகிறது. இதுவே மனித வாழ்வில் நடைபெறும் இயல்பு.
இந்த இயல்பு காலப்போக்கில் பலருக்கு மறுக்கப்படும் சூழலாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கற்றலை மறந்து பணத்தை தேடியதன் விளைவே இன்று கல்வி மறுக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி, கற்றல் போன்ற வார்த்தைகளின் ஆழம் அறிந்து உருவானதே 'கிதாபி மஸ்தி'.
இந்த நூலகத்தின் ஒவ்வொரு செங்களிலும், நிறைந்திருக்கும் புத்தகங்களும் கல்வி மறுக்கப்படும் குழந்தைகளின் கதைகளை அடுக்குகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் துர்கா நகர் பஸ்தி என்ற பகுதியில் குடிசையில் தொடக்கம் கண்டு, தற்போது கட்டிடக்கலை மாணவர்களின் தேசிய சங்கத்தின் முயற்சியால் கிதாபி மஸ்தி புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இன்று பல லட்ச மாணவர்களின் கல்விக்கு ஒளியாக இருக்கக்கூடிய கிதாபி மஸ்தி 9 வயது சிறுமியால் துவக்கப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகது. முஸ்கன் அஹிவார் என்ற சிறுமியின் கனவு பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையாக மாற்றம் கண்டுள்ளது. முஸ்கனின் கனவில் தொடங்கி இன்று அதில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு மக்களின் ஒன்றிணைந்த கனவுகளாக பயணம் செய்து வருகின்றது கிதாபி மஸ்தி நூலகம். குறிப்பாக நூலகம் என்பதைக் கடந்து இன்று பல குழந்தைகளின் நம்பிக்கையாக இயங்கி வருகிறது.
இது குறித்து முஸ்கன் கூறுகையில், "என்னுடைய ஒன்பது வயதில் எனக்கு புத்தகங்கள் மீது ஆர்வம் வந்தது. பின்னர் அது நூலகம் என்ற கனவுக்கு வழிவகுத்தது. எங்கள் ஊரில் என் போன்ற குழந்தைகள் பலரும் கல்வி கற்கும் திறன் இருந்தும் அதற்கான வழிகள் இல்லாமல் இருந்தனர். இந்த நிலைக்கு மாற்றம் கொண்ட வர எண்ணினேன்.