புதுடெல்லி: புதன்கிழமை உஜ்ஜைனி தொகுதியின் பாஜக எம்.பி. அனில் ப்ரோஜியா தனது குடும்பத்தினருடன் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அனில் ப்ரோஜியாவின் 5 வயது மகள் அஹானா ப்ரோஜியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே 5 முதல் 10 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.
ஐந்து வயதான அஹானாவிடம் "நான் யார் தெரியுமா?" என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கும் சிறுமி அஹானா, "தெரியும். நீங்கள் தான் மோடி ஜி. நீங்கள் தான் தினமும் டிவியில் வருவீர்கள்" என்று பதில் கொடுத்துள்ளார்.
இந்தப் பதிலை கேட்டு புன்னகைத்த பிரதமர் மோடி, "நான் என்ன செய்கிறேன் என்று உனக்குத்தெரியுமா?" என்று மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, "நீங்கள் மக்களவையில் வேலை செய்கிறீர்கள்" என்று சிறுமி அஹானா பதிலளிக்க அந்த அறையில் இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
அனில் ப்ரோஜியா தன் மகள் பிரதமருடன் பேசியதை அவர் ட்விட்டரில் "உலகின் மிகவும் பிரபலமான தலைவரும், நாட்டின் வெற்றிகரமான பிரதமருமான நரேந்திர மோடியை குடும்பத்தினருடன் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்த கடின உழைப்பாளி. நேர்மையான, தன்னலமற்ற பிரதமரின் முன்னிலையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். எனது இளைய மகள் அஹானா, மூத்த மகள் பிரியான்ஷி இருவரும் பிரதமரை சந்தித்து அவரது ஆசியைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:தேவைப்பட்டால் கர்நாடகாவில் "யோகி மாடல்" கடைபிடிக்கப்படும் - சட்டம் ஒழுங்கு குறித்து பசவராஜ் பொம்மை பேட்டி!