துபாய் :17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் முதல் மே வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தொடருக்கு முன்னதாக வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று (டிச. 19) நடைபெற்றது.
நட்சத்திர வீரர்களை ஏலம் எடுப்பதில் ஐபிஎல் அணி உரிமையாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. நடப்பு ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. அண்மையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக கைப்பற்றிய நிலையில், உலக கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு கடும் கிராக்கி காணப்பட்டது.
சென்னையில் அணி எப்போதும் போலவே அனைவரும் எதிர்பார்த்த அளவில் சிறந்த வீரர்களை வாங்கி, சரியான விலைக்கு வாங்கி குவித்து உள்ளது. அதேநேரம் சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன், ஷாருக்கான் உள்ளிட்ட தமிழக வீரர்களை ஏலம் எடுக்காமல் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுத்தது ரசிகர்களிடையே சற்று பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜொலித்த நியூசிலாந்து இளம் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை 1 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது. அவரைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூரை 4 கோடி ரூபாய்க்கும் மற்றொரு நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சலை 14 கோடி ரூபாய்க்கும் வாங்கி உள்ளது.
வருடத்திற்கு ஒரு புதுமுக வீரரை களமிறக்குவதை நோக்கமாக கொண்ட சென்னை நடப்பு சீசனில் 20 வயதான உத்தர பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி என்பவரை 8 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி உள்ளது. அணியில் அம்பதி ராயுடுக்கான இடத்தை நிரப்ப சமீர் ரிஸ்வி ஏதுவான வீரர் எனக் கூறப்படுகிறது.