லக்னோ: கோரக்பூரில் ஆயுஷ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சரின் அலுவலகம், "இதற்கான அடிக்கல்நாட்டுதல் 2021 ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும். இதற்கு முந்தைய பணிகள் அனைத்தும் தாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும். அப்படி முடித்தால்தான் கட்டுமான பணிகளை உடனே தொடங்க முடியும்" எனத் தெரிவித்துள்ளது.
ஆயுஷ் பல்கலைக்கழகத்தின்கீழ் கல்லூரிகள், பிற நிர்வாகப் பணிகள் 2021-22 பருவத்தில் தொடங்கும் வகையில் கட்டுமான பணிகள் திட்டமிடப்படும்.
இந்த ஆயுஷ் பல்கலைக்கழக கட்டுமான பணிகளுக்கு உத்தரப் பிரதேச அரசின் பொதுப்பணித் துறை 299 கோடியே 88 லட்சம் (29,987.83 லட்சம்) ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாக கட்டடம், தகவல் மற்றும் மதிப்பாய்வு மையம், மருத்துவமனை கட்டடம், பல்கலைக்கழகத்தின் குடியிருப்பு உள்ளிட்ட கட்டுமான பணிகள் 2021 டிசம்பரில் நிறைவுபெறும். கல்விக் கட்டடம், விடுதிகள் கட்டுமான பணி 2022ஆம் ஆண்டு முடிக்கப்படும்.
மூன்றாம் கட்டமாக, விருந்தினர் இல்லம், அரங்கம், மேலும் பிற பணிகளின் கட்டுமான பணிகள் நடைபெறும். பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலின் தரநிலைகள் பின்பற்றப்படும்.