உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துவருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்துவிடும் என அரசியல் நோக்கர்கள் கருதிவந்தனர்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் பாஜகவுக்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கும் கடும் சவாலைத் தந்துவருகிறார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பாஜகவைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள், பத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியது பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதில் பெரும்பாலானோர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இந்த அரசியல் நகர்வுகளுக்கு இடையே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது சொந்த தொகுதியான கோரக்பூருக்கு வந்தார்.
முதலமைச்சரின் இந்த பயணம் குறித்து அகிலேஷ் யாதவ் கிண்டலடிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். யோகி குறித்து அவர், "தேர்தலில் யோகி ஆதித்யநாத் தோற்று முதலமைச்சர் நாற்காலியை இழக்கப்போவது நிச்சயம். எனவே, அவர் தனது பழைய வேலைக்கே திரும்ப தயாராகிவருகிறார்.
தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர். விவசாயிகள் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு பாஜக அரசு ஒன்றும் செய்யவில்லை" என்றார்.
இதையும் படிங்க:பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு வானிலையே காரணம் - நீதிமன்ற விசாரணையில் தகவல்