ஹரித்வார்:யோகா குரு என்று அழைக்கப்படும் இந்து சாமியார் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை தொடர்ந்து விமர்சித்து வருபவர். இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள ரிஷிகுல் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் நடந்த ஆயுர்வேத கருத்தரங்கில் பங்கேற்று பேசிய பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவத்தை மீண்டும் தாக்கிப் பேசியுள்ளார்.
ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் மத்தியில் பேசிய பாபா ராம்தேவ், "அலோபதி மருந்துகள் நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக மக்களை நோயாளியாக்குகிறது. ஆயுர்வேதத்திற்கு போட்டியாக பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன. தற்போது அலோபதியை குழிதோண்டி புதைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் தலைசிறந்த யோகா பயிற்சிகளை கையாளத் தொடங்கி விட்டன. இனி வரும் காலங்களில், அலோபதி மருத்துவம் பாழும் குழியில் புதைந்துவிடும், அது நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது.
அலோபதி மருந்துகள் ஒருபோதும் எந்த நோயையும் குணப்படுத்தாது, ஒரு நோய்க்காக நீண்ட காலத்திற்கு மருந்து உட்கொண்டாலும் அந்த நோய் குணமாகாது. உலகில் சுமார் 25 சதவீதம் பேருக்கு, அலோபதி மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் காரணத்தால் கல்லீரல் பிரச்னை ஏற்படுகிறது. அதேபோல், அலோபதி மருந்துகளால் பலருக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன.
கரோனாவை குணப்படுத்துவதில் கோவிட் தடுப்பூசிகள் தோல்வியடைந்தன. கரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடிப்பதில் அலோபதி மருத்துவம் தோற்றுவிட்டது, மாறாக ஆயுர்வேத மருத்துவம் வெற்றி பெற்றது. மருத்துவ மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், பின்பு தானாக வெற்றி கிடைக்கும்.