தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Ylang Ylang: உத்தரகாண்ட்டில் முதல் முறையாக பூத்துள்ள "கனங்கா ஓடோராட்டா" மலர்! - உத்தரகாண்ட் நறுமணப் பூங்காவில் பூத்த அரிய வகை மலர்

பிலிப்பைன்ஸை பூர்வீகமாகக் கொண்ட ய்லாங்-ய்லாங் மலர் முதல் முறையாக உத்தரகாண்ட்டில் பூத்துள்ளது. வாசனைத் திரவியங்களின் ராணி என்று அழைக்கப்படும் இந்த மலர்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

Ylang Ylang
Ylang Ylang

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 7:28 PM IST

உத்தரகாண்ட்:ய்லாங்-ய்லாங் (Ylang Ylang ) என்ற தாவரம் பிலிப்பைன்ஸை பூர்வீகமாகக் கொண்டது. இதன் அறிவியல் பெயர் கனங்கா ஓடோராட்டா (Cananga odorata). இது கனங்கா மரம் என்றும் அழைக்கப்படும். இந்த தாவரம், பிலிப்பைன்ஸ் மட்டுமல்லாமல் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகிறது. இந்த மரத்திலிருந்து கிடைக்கும் பூ மிகவும் அடர்த்தியான வாசனையைக் கொண்டது. இந்த பூக்கள் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும், எசென்சியல் ஆயில் (Essential oil) தயாரிக்கவும் பயன்படுகின்றன. இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வாசனை திரவியங்கள் தயாரிக்க இந்த பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மலர் வாசனைத் திரவியங்களின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் விலை 100 மில்லி லிட்டர் சுமார் இரண்டாயிரம் ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு காரணம் இரண்டு கிலோ எண்ணெய் தயாரிக்க சுமார் 100 கிலோ பூக்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் இந்த எண்ணெய்யின் பயன்பாடு அதிகம். அதேபோல், முன்னணி வாசனைத் திரவியங்களில் இந்த ய்லாங்-ய்லாங் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தனை மதிப்புமிக்க, சிறப்பு வாழ்ந்த கனங்கா ஓடோராட்டா மலர் உத்தரகாண்ட்டில் முதல் முறையாக பூத்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் ஹல்த்வானி வனப்பிரிவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய நறுமணப் பூங்காவில் இந்த கனங்கா ஓடோராட்டா மலர் பூத்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, உத்தரகாண்ட் மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தினர் இந்த கனங்கா ஓடோராட்டா செடியை நறுமணப் பூங்காவில் நட்டு வைத்தனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த செடி தற்போது பூத்துள்ளது. இந்த செடியை நட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் பச்சை நிறப் பூக்கள் மலரும், பின்னர் அவை மஞ்சள் நிறமாக மாறும். மஞ்சள் நிறப் பூக்களில் இருந்தே எண்ணெய் எடுக்கப்படும்.

வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் மட்டுமல்லாமல், மருந்துகள் தயாரிப்பிலும் இந்த மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மலரில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மற்றும் மருந்துகள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, மூட்டு வலி உள்ளிட்ட நோய்களுக்கு நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இந்த மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மலர் தற்போது உத்தரகாண்ட்டில் மலர்ந்துள்ளதால், வட இந்தியாவில் வாசனை திரவியங்கள் உற்பத்தி தொழிலை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உலக தேங்காய் தினம்: தேங்காயை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமா?

ABOUT THE AUTHOR

...view details