பெங்களூரு: கர்நாடக முதலமைச்சரின் உதவியாளர் என்.ஆர். சந்தோஷ் தற்கொலைக்கு முயற்சித்ததாகச் செய்தி வெளியான நிலையில், தான் அவ்வாறான செயலில் ஈடுபடவில்லை என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று (நவ. 27ஆம் தேதியன்று) சந்தோஷ் டஜன் கணக்கில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி. அவரை அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதையடுத்து, அன்றே மருத்துவமனை விரைந்த கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா சந்தோஷின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, எடியூரப்பா கூறுகையில், "ஏன் இந்தத் தவறான முடிவை எடுத்தார் என எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், தற்போது அவர் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டார்" என்றார்.
மருத்துவமனையிலிருந்து குணமடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சந்தோஷ், "வெள்ளிக்கிழமையன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன், அப்போது அசிடிட்டி ஏற்பட்டது. இதையடுத்து, மருந்து எடுத்துக்கொண்டதே இதற்குக் காரணம்" எனத் தெரிவித்தார்.