புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது. வரும் ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட 17 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளன. யஷ்வந்த் சின்ஹா முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் என்பதும், அவர் அக்கட்சியில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு விலகி 2021இல் மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆளும் மத்திய பாஜக அரசு இன்னும் ஓரிரு நாளில் தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:குடியரசுத்தலைவர் தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகள் கூட்டம் - திமுகவின் டி.ஆர்.பாலு பங்கேற்பு!