டெல்லி: திரிணாமுல் காங்கிரஸின் துணைத் தலைவர் பதவியிலிருந்து யஷ்வந்த் சின்ஹா விலகியுள்ளார். இதனால் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அவரது ட்விட்டரில் கட்சியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் , ‘திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தாஜி எனக்கு அளித்த மரியாதைக்கும், கவுரவத்திற்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனை மம்தா அனுமதிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவெடுக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார்.
ஆலோசனையின்போது, சரத் பவார் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டதால், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது . தற்போது யஷ்வந்த் சின்ஹா திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகியுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் தேர்தல்: சரத் பவார் மறுப்பு - பொது வேட்பாளர் யார்?