டெல்லி:மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த மூத்த அரசியல்வாதியான யஷ்வந்த் சின்ஹா, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வரும் ஜூலை 18 அன்று குடியரசு தலைவர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் , அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து யஷ்வந்த் சின்ஹாவிடம் ஈடிவி பாரத் சார்பாக கேள்வி எழுப்பிய போது, தற்போது எந்த தகவலும் கூறவிரும்பவில்லை என்றார்; இருப்பினும் ஈடிவி பாரத்திற்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவலின்படி யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட 19 எதிர்கட்சிகளின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருதலைபட்சமான இந்த தேர்வில் எந்த கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.