டெல்லி:டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் கடந்த 9ஆம் தேதி அன்று, 41 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமழை கொட்டியது. 24 மணி நேரத்தில் 15 சென்டி மீட்டர் மழைப் பதிவானது. இந்த கனமழையால் டெல்லியில் குடியிருப்புகள், சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. நதிகளில் நீர்மட்டம் உயர்ந்தது. குறிப்பாக யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரித்தது.
இதனிடையே இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாவட்டங்களில் பெய்த கனமழையால், டெல்லியில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. இமாச்சலப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதனால், ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த உபரி நீர் யமுனை நதியில் கலந்ததால், யமுனை நதியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அபாய அளவை எட்டியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, யமுனையின் நீர்மட்டம் 208.46 மீட்டரை எட்டியுள்ளது. யமுனைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வசித்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நீர் வரத்து அதிகரிப்பால், டெல்லியில் யமுனை ஆற்றைச் சுற்றியுள்ள சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டெல்லியில் மகாத்மா காந்தி சாலை, வெளிவட்ட சாலை, ராஜ்காட் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.