டெல்லி:டெல்லி, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. குறிப்பாக டெல்லியில் கடந்த ஜூலை 9ஆம் தேதி அன்று, 24 மணி நேரத்தில் 15 சென்டி மீட்டர் மழை பதிவானது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமழை கொட்டியதால் டெல்லி நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது.
அதேபோல், இமாச்சலப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதனால் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து உபரி நீர் யமுனையில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக யமுனை நதியில் நீர்மட்டம் உயர்ந்தது.
கடந்த 13ஆம் தேதி நிலவரப்படி, யமுனையின் நீர்மட்டம் 208.46 மீட்டர் வரை அதிகரித்தது. இதன் காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் டெல்லியில் யமுனையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அதன் பிறகு, கடந்த ஜூலை 18ஆம் தேதி யமுனையில் நீர்மட்டம் அபாய அளவுக்கு கீழே குறைந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூலை 23) காலை 7 மணி நிலவரப்படி, யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவைக் கடந்து 205.81 மீட்டராகப் பதிவாகி உள்ளது.
யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சில குடியிருப்புப் பகுதிகள் வெள்ள நீர் சூழும் ஆபத்து உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற அரசு ஆயத்தமாக இருப்பதாகவும் டெல்லி வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
அதேபோல், யமுனை நதியின் துணை நதியான ஹிண்டன் நதியிலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஹிண்டன் ஆற்றின் அருகில் உள்ள சிஜார்சி, ஈகோ டெக் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். தற்போது நிலைமை சீராக உள்ளதாகவும், நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Delhi Flood: அபாய கட்டத்தை கடந்த யமுனை - டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு!