தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2021, 9:14 AM IST

Updated : May 24, 2021, 1:46 PM IST

ETV Bharat / bharat

உருவாகிறது ‘யாஸ்’ புயல்!

yaas storm formed in bay of bengal
yaas storm formed in bay of bengal

09:10 May 24

ஹைதராபாத்: வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ’யாஸ்’ புயலாக இன்று உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

‘யாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் மே 26ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நான்கு நாட்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 'யாஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்னை, உதகை மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

இப்புயலை எதிர்கொள்ள ஒடிசா மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே புயலை சமாளிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.  

மத்திய உள்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களின் அலுவலர்களும், தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட முக்கிய துறைகளின் மூத்த அலுவலர்களும், பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Last Updated : May 24, 2021, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details