முசாபர் நகர்:இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மே 28ஆம் தேதி நாட்டின் புதிய நாடாளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
ஆகவே, புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ள டெல்லியின் சென்ட்ரல் விஸ்டாவுக்கு மல்யுத்த வீரர்கள் செல்ல முயன்றனர். இதன் மூலம் தங்களது எதிர்ப்பையும், போராட்டக் கோரிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த நினைத்த மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து பயணிக்கத் தொடங்கினர்.
இவர்களைத் தடுத்த டெல்லி காவல் துறையினர், அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த சூழலில், போராட்டக் களத்தில் இருந்த மல்யுத்த வீரர்களை காவல் துறையினர் கையாண்ட விதம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நாடாளுமன்ற பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் மட்டுமின்றி, பல்வேறு எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நேற்றைய முன்தினம் (மே 30), தாங்கள் நாட்டுக்காக பெற்ற உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்களை ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு செய்தனர். இது அடுத்தகட்ட பரபரப்பை அடைந்தது. தொடர்ந்து, கங்கை ஆற்றில் பதக்கங்களை வீசச் சென்றபோது, பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் நரேஷ் டிகாயிட் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள் மல்யுத்த வீரர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக வலியுறுத்த 5 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில், மல்யுத்த வீரர்கள் திரும்பி சென்றனர். அது மட்டுமல்லாமல், மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (ஜூன் 1) உத்தரப்பிரதேசத்தில் மகா பஞ்சாயத்து நடத்த உள்ளதாக நரேஷ் டிகாயிட் அறிவித்தார்.
இதன் அடிப்படையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள சோரம் என்ற கிராமத்தில் வைத்து மகா பஞ்சாயத்து போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று (மே 31) உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கியில் நடைபெற்ற பொது பேரணியில் பேசிய பிரிஜ் பூஷன் சிங், “மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு உணர்வுப் பூர்வமான நாடகம். அவர்கள் கூறும் பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தற்கொலை செய்து கொள்வேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:Wrestlers Protest: அரசுக்கு 5 நாள் கெடு.. உ.பி.யில் விவசாய சங்கங்கள் மகா பஞ்சாயத்து போராட்டம்!