டெல்லி:மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிர்ஜ் பூஷன் ஷரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாலியல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த பல நாட்களாக, மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ( மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டு இருந்த நிலையில், அதை நோக்கி, மல்யுத்த வீரர்கள் பேரணி செல்ல முயன்றனர்.
இந்நிலையில், டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி, கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், நீதி கிடைக்கும் வரை,தாங்கள் வீடு திரும்பப் போவது இல்லை, தங்களது இந்த போராட்டம் தொடரும் என்று, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீண்டும் தெரிவித்து உள்ளார்.
ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 109 பேர் உள்ளிட்ட 700 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது, “பிரிவுகள் 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்), 186 (பொதுப் பணிகளைச் செய்வதில் அரசு ஊழியரைத் தடுப்பது), 353 (அரசு ஊழியரைத் தடுக்க குற்றவியல் சக்தியைத் தாக்குதல் அல்லது பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 332 (பொது ஊழியரை தனது கடமையிலிருந்து தடுக்கும் வகையில் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின்படி”, இவர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (மே 28) இரவு, பத்திரிகையாளர்களை சந்தித்த பஜ்ரங் புனியா கூறியதாவது, "நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், எங்கள் சகோதரிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். ஜனநாயகம் தவறான வழியில் செல்வதாக சென்று கொண்டு இருக்கிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை வீடு திரும்புவது சாத்தியமில்லை. நான்தான் கடைசியாக விடுதலை செய்யப்பட்டேன். மீதமுள்ள மல்யுத்த வீரர்களை நான் சந்திப்பேன், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் விரைவில் முடிவு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.