டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாரபட்சமற்ற வகையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தாக கூறப்பட்டு உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அமித் ஷா வீட்டில் வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், சத்யாவர்த் காதியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள் குறித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வீரர், வீராங்கனைகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதேநேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விசயத்தை பரிசீலிப்பதாக உறுதியளித்ததாகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரி 35 நாடகளுக்கும் மேலாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.