தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிவிட்டர் பதிவை டெல்லி காவல்துறை நீக்கியதால் சர்ச்சை! - டெல்லி போலீஸ் ட்விட்டர்

இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான வழக்கு தொடர்பான டிவிட்டர் பதிவை, டெல்லி காவல்துறை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Delhi police
டெல்லி காவல்துறை

By

Published : Jun 1, 2023, 2:02 PM IST

டெல்லி:மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது, மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர் பாலியல் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், டெல்லி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்தனர். பூஷனை கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரிஜ் பூஷன் மீதான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என டெல்லி போலீசார் தரப்பில் கூறப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதை மறுத்த டெல்லி காவல்துறை, "பூஷன் மீதான வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்றும், இதுதொடர்பான இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்ய உள்ளதாகவும் வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தீவிர விசாரணையின் கீழ் உள்ளது. ஊடக நிறுவனங்கள் இதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்" என டிவிட்டரில் பதிவிட்டது.

இதையடுத்து இந்த டிவிட்டர் பதிவுகளை டெல்லி காவல்துறை ஒரு மணி நேரத்துக்குள் நீக்கியது. பின்னர் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில், இந்த வழக்கு குறித்த நிலை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கு விசாரணையில் இருப்பதால் அதை பற்றிய விவரங்களை வெளியிடுவது விதிமுறைக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில மணி நேரங்களில், இந்த டிவிட்டர் பதிவும் நீக்கப்பட்டது. பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை சில மணி நேரங்களில் காவல்துறை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் சுமன் நல்வா கூறுகையில், "மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் பரிசீலனையில் உள்ளது. சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. ஆதாரங்கள் குறித்து எந்த தகவலையும் நாங்கள் கூற முடியாது. புகார் தொடர்பாக பல பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இன்னும் 15 நாட்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்" என கூறினார்.

இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கு கடந்த திங்கள்கிழமை சென்ற மல்யுத்த வீராங்கனைகள், தாங்கள் பெற்ற பதக்கங்களை ஆற்றில் வீச முயன்றனர். ஆனால் அங்கு வந்த விவசாய சங்கத்தினர், 5 நாட்களுக்கு பின் முடிவெடுக்கலாம் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என, மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொடங்க தயார் என பூஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: wrestlers protest update: மல்யுத்த வீரர்கள் போராட்டம்..உ.பியில் இன்று மகா பஞ்சாயத்து!

ABOUT THE AUTHOR

...view details