தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த மேஜர் ஜெயந்துக்கு ராணுவப் பணியிடத்தில் இறுதி மரியாதை!

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு, தேஷ்பூர் விமான தளத்தில் வைத்து ராணுவத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராணுவப் பணியிடத்தில் இறுதி மரியாதை!
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராணுவப் பணியிடத்தில் இறுதி மரியாதை!

By

Published : Mar 17, 2023, 6:22 PM IST

Updated : Mar 17, 2023, 11:03 PM IST

தேஷ்பூர்:அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் உள்ள தேஷ்பூர் மிசாமரி ராணுவ முகாமில் இருந்து வழக்கமான பணிக்காக, இரண்டு ராணுவ அதிகாரிகள் உடன் சீட்டா என்ற ராணுவ ஹெலிகாப்டர் நேற்று (மார்ச் 16) காலை புறப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தின் டிர்ராங் என்ற பகுதிக்கு உள்பட்ட மண்டாலா என்னும் இடத்துக்கு அருகில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது.

இதன் ரேடார் சிக்னல் காலை 9.15 மணி உடன் முடிவடைந்ததாக ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய ராணுவம், சேவைகள் வாரியப் படையினர், இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அருணாச்சலப்பிரதேச காவல் துறையினர் ஆகியோர் காலை 11 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

இதனைத்தொடர்ந்து இந்த சீட்டா ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் லெப்டினண்ட் கர்னல் வினய் பானு ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஏ ஆகிய 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்து நடந்த இடம், டிர்ராங் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. எனவே, இருவரது உடல்களும் நேற்று இரவு வெஸ்ட் காமெங் மாவட்டத்தில் உள்ள டிர்ராங் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராணுவப் பணியிடத்தில் இறுதி மரியாதை!

இதனையடுத்து இன்று (மார்ச் 17) தேஷ்பூரில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான ஷால்னிபாரி விமான தளத்தில் உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகளுக்கும் ராணுவத்தினர் தரப்பில் பணியிடத்தில் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுகாத்தி பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினண்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறுகையில், “உயிரிழந்த 2 ராணுவ அதிகாரிகளின் உடல்களும், தேஷ்பூர் விமான தளத்தில் இருந்து ஹைதராபாத் மற்றும் மதுரைக்கு கொண்டு செல்லப்படும்.

குறிப்பாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்டினண்ட் கர்னல் வினய் பானு ரெட்டியின் உடல் இன்று மாலை 6 மணிக்கு ஹைதராபாத்துக்கும், மேஜர் ஜெயந்த் ஏ உடன், இரவு 8 மணிக்கு மதுரைக்கும் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் (33), தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை மதுரையில் முடித்துள்ளார். மேலும் இன்னும் 2 ஆண்டுகளில் ராணுவத்தில் இருந்து ஜெயந்த் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரண்டு இந்திய இராணுவ அலுவலர்களுக்கு இரங்கல் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர்.A.ஜெயந்த் அவர்களது குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்’ எனக்குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க:ஹெலிகாப்டர் விபத்தில் தேனி மேஜர் ஜெயந்த் மரணம்; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

Last Updated : Mar 17, 2023, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details