நவி மும்பை:இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளுக்கென இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 20 ஓவர்கள் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என்பதால் விறுவிறுப்புடன் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பர்.
ஆடவர் பங்கேற்கும் ஐபிஎல் தொடரை போல், வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் என கருதப்படுகிறது. அதன்படி மும்பையில் மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (மார்ச் 4) தொடங்கியது. மும்பை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ் மற்றும் உ.பி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
முதல் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெத் மூனி தலைமையிலான குஜராத் அணிகள் மோதி வருகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் ஆகும். டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த வகையில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 207 ரன்களை குவித்துள்ளது. முன்னதாக பேசிய மும்பை அணி கேப்டன் கவுர், "இது எங்களுக்கு மிகவும் சிறப்பான நாள். பேட்டிங் செய்ய இது நல்ல மைதானம். எங்கள் அணியில் சில இளம் வீராங்கனைகள் உள்ளனர். அவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார்.