டெல்லி:இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட ‘சாண்ட்விச்சில்’ புழு இருந்ததாக பெண் பயணி வெளியிட்ட வீடியோ ஆதாரத்தினை அடுத்து, விமான நிறுவனம் சார்பில் பயணியிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதுடன், உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்றைய முன்தினம் (டிச.29) 6E 6107 என்ற இண்டிகோ விமானம் சென்றுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாகக் கூறி, சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர், தனக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருப்பது குறித்து விமானப் பணியாளர்களிடம் தெரிவித்தும், அவர்கள் தொடர்ந்து அந்த சாண்ட்விச்-ஐ மற்ற பயணிகளுக்கு வழங்கியதாகவும், அதில் யாரேனும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.