கோவாவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், கோவா, தேசிய யுனானி மருத்துவ நிறுவனம், காசியாபாத், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோமியோபதி, டெல்லி ஆகிய மூன்று தேசிய ஆயுஷ் நிறுவனங்களையும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிறுவனங்கள் நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், மலிவு விலையில் ஆயுஷ் சேவைகள் கிடைப்பதை எளிதாக்கும்.
ரூ. 970 கோடி செலவில் சுமார் 500 மருத்துவமனை படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனங்கள், மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை சுமார் 400 ஆக அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் அறிவியல், அறிவு மற்றும் கலாச்சார அனுபவத்தின் மூலம் உலக நலனை உறுதி செய்வதே அமிர்த காலத்தின் முக்கிய தீர்மானங்களில் ஒன்று. உலகின் 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்தை பாரம்பரிய மருத்துவ முறையாக அங்கீகரித்துள்ளது.
இன்று திறக்கப்பட்ட மூன்று தேசிய நிறுவனங்கள் ஆயுஷ் சுகாதார அமைப்புக்கு புதிய வேகத்தை வழங்கும். குஜராத் முதலமைச்சராக நான் இருந்த போது ஆயுர்வேதம் தொடர்பான நிறுவனங்களை ஊக்குவித்தேன். குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டேன். இதன் விளைவாக, உலக சுகாதார நிறுவனம் ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய மையத்தை நிறுவியது. ஆயுர்வேதத்தின் பழங்கால சிகிச்சை முறைகளுக்கு உலகம் திரும்பி வருகிறது.
ஆயுர்வேத சிகிச்சை முறைகள் பல்வேறு நாடுகளின் பின்பற்றப்படுகின்றன எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், கோவா ஆளுநர் பிஎஸ் ஶ்ரீரன் பிள்ளை, மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால், மத்திய ஆயுஷ் இணையமைச்சர் முஞ்சப்பாரா மகேந்திரபாய், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஶ்ரீபத் யெசோ நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நாட்டுக்கு தேவை வளர்ச்சியே, குறுக்குவழி அரசியல் அல்ல.. பிரதமர் நரேந்திர மோடி..