சென்னை: சிங்கங்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. காட்சிக்கு அழகாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானது இந்த ‘வன ராஜா’. தனக்குப் பசி எடுத்தால் மட்டுமே வேட்டையாடும் சிறப்பு குணம் கொண்டதால் இவை ‘காட்டின் ராஜா’ என்று அழைக்கப்படுகிறது. இதனைப் பெருமைப்படுத்தும்விதமாக ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
காட்டில் உள்ள விலங்குகளை அச்சமூட்டக்கூடிய ஒரு விலங்காக விளங்குகின்ற சிங்கத்திற்கு மரியாதை செலுத்தும்விதமாக இந்த நிகழ்வினை, ‘பிக் கேட் ரெஸ்க்யூ’ என்னும் அமைப்பு உருவாக்கியது. இதுவே சிங்கங்களுக்கென்று பிரத்யேகமாக அமைந்த ஒரு சரணாலயமாகத் திகழ்கிறது. இந்நாளில் உலகில் பல இடங்களில் சிங்கங்களுக்கு மரியாதையும் செலுத்தப்படுகிறது.
மனிதர்கள் பன்நெடுங்காலமாக சிங்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. பிரான்ஸின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள, அர்டேக் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ‘பேலியோலித்திக்’ கால மனிதனின் குகை ஓவியங்களில்கூட சிங்கங்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
மனிதர்களும், சிங்கங்களும்
வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் சிங்கங்கள், யூரேசியா, வட அமெரிக்கா வழியாக தென் அமெரிக்கா வரை காணப்பட்டன. தற்போதைய சூழலில் சஹாரா பகுதிகளை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே காணப்படுகின்றன.